Skip to main content

“தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது”- நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பாராட்டு!

Published on 28/06/2021 | Edited on 28/06/2021
"Vaccination practice is being implemented well in Tamil Nadu" - Judge Sanjib Banerjee

 

வழக்கறிஞர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்கள் மற்றும் கிளார்க்குகள், அவர்களின் குடும்பத்தினர், நீதிமன்ற பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான சிறப்பு முகாமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி துவங்கி வைத்தார்.

 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீதிபதிகள் என்.கிருபாகரன்,  எம்.எம்.சுந்தரேஷ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, நீதிக் கரங்கள் அமைப்பின் நிர்வாகி பி.வில்சன், தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
 

 

"Vaccination practice is being implemented well in Tamil Nadu" - Judge Sanjib Banerjee

 

முகாமின் முதல் தடுப்பூசியை இரண்டாவது தவணையாக பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செலுத்திக்கொண்டார். முகாமை தொடங்கிவைத்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசியபோது, “கரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிக்கு மாற்று ஏதும் இல்லை என்றும், கரோனா மீண்டும் பரவாமல் இருக்க முகக்கவசம், கிருமி நாசினி, தனி மனித இடைவெளி நடைமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறை சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், “கரோனா பெருந்தோற்றை தடுக்க ஒரே வழி தடுப்பூசி தான் எனவும், 11 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ள நிலையில், 1 கோடியே 41 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள 9 கோடி தடுப்பூசி மருந்துகளைப் பெற்றுத் தர உயர்நீதிமன்றம் சார்பில் ஒன்றிய அரசிடம் அறிவுறுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.

 

மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேசும்போது, "தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 10 நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலை பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பணி நிறைவடையும். தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உள்ளது. 90 ஆயிரம் பேர் அங்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

 

மேலும், இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் சுமார் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது எனவும், தடுப்பூசி இல்லை என காலை முதல் செய்திகள் வந்து கொண்டுள்ளதாகவும், தடுப்பூசி இல்லை என்பது வருத்தமான ஒன்றுதான் என்றும், இன்று மதியத்திற்கு மேல் தடுப்பூசி தட்டுப்பாடு நிலைதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன், “கரோனாவால் வருமானம் இழந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு  தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் எனவும், இறந்து போன வழக்கறிஞர்கள் குடும்பங்களுக்கு பெரும் உதவிசெய்ய வேண்டும்” எனவும் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்