தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிகள் முற்றிலும் தீர்ந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்நிலையில், மதுரையில் மூன்று தினங்களுக்குப் பின்பு இன்று (11.06.2021) மீண்டும் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு தற்போது 2,500 கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி போடும் பணிகள், இன்றுமுதல் தொடங்கியுள்ளது. தகவல் தெரியாததால் தடுப்பூசி மையங்களில் கூட்டம் குறைவாக உள்ளது. இதேநிலைதான் மாவட்டத்தில் உள்ள 90 தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் மதுரை மாவட்டத்தில் இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டும் இன்று செலுத்தப்படுகிறது என்ற தகவலும் அதிகாரிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது. கோவிஷீல்டு மருந்து வராததன் காரணமாக கோவிஷீல்டு செலுத்தக் கூடியவர்கள் தேவையின்றி தடுப்பூசி செலுத்தும் மையத்திற்கு வர வேண்டாம் மாவட்ட சுகாதாரத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.