தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கையிருப்பில் இருந்த கரோனா தடுப்பூசிகள் கோவிஷீல்டு, கோவாக்சின் காலியாகின. தற்போது கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும், நாளை தடுப்பூசிகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கரோனா தடுப்பூசி போடும் மையங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசிப் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "தமிழகத்தின் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்னும் இரண்டு நாட்களில் தீர்ந்துவிடும். 25 லட்சம் தடுப்பூசிகள் தர வேண்டிய நிலையில், 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய அவசியம் தமிழகத்துக்கு இல்லை. மத்திய அரசு இன்னும் 12 லட்சம் கரோனா தடுப்பூசிகளைத் தர வேண்டியுள்ளது. 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தடைபடாது. தேவையுள்ள பிற மாவட்டங்களுக்கு 1,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள் அனுப்பிவைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.