
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களுக்கு முன்பு ஒருவித தயக்கம் இருந்தது. அப்போது பல்வேறு சமூக ஆர்வலர்கள் பரிசுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு வழங்கி தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கப்படுத்தினார்கள். தற்போது அந்த தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முனைப்புடன் உள்ளனர்.
இந்த நிலையிலும் மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக கள்ளக்குறிச்சியில் உள்ள விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் ஆணி படுக்கையில் படுத்து யோகாசனம் செய்தபடி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தினார்கள்.
அதில் கச்சராபாளையத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (27) என்பவர் ஆணிப் படுக்கையில் படுத்தபடியே 15 நிமிடம் வித்தியா ஆசனம், காந்தியாசனம், பர்வதாசனம், சுகாசனம், தடா ஆசனம் என ஐந்து வகையான யோகாசனங்களை செய்து காட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் பார்த்து தாங்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமுடன் கூறியபடி சென்றனர்.