உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் வீடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட அனைவரும், பரிசோதனை நிறைவடைந்ததும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கடந்த 12ஆம் தேதி சுரங்க விபத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, ரிஷிகேஷிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். முதல் கட்ட பரிசோதனையில் தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைபாடு எதுவுமில்லை எனத் தெரியவந்துள்ளது. மேலும், முழுமையான பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர். ரத்தப் பரிசோதனை, கல்லீரல் செயல்பாடு சோதனை, சிறுநீரக செயல்பாடு சோதனை, எக்ஸ்ரே, இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ரவிகாந்த் “மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உடல் ரீதியான காயங்களோ, மன ரீதியான அழுத்தமோ இல்லை. அதனால், அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 41 தொழிலாளர்களும் ஏழு வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களில், அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அனைவருக்கும் மருத்துவ அனுமதி வழங்கியுள்ளோம். ஜார்கண்ட் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். அதுபோல், மற்ற மாநிலங்களிலும் நோடல் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.