Skip to main content

உட்கட்சித் தேர்தலில் ரகளை : இழுத்து மூடப்பட்ட காங்கிரஸ் அலுவலகம்

Published on 20/09/2017 | Edited on 20/09/2017

உட்கட்சித் தேர்தலில் ரகளை : இழுத்து மூடப்பட்ட காங்கிரஸ் அலுவலகம்



காங்கிரசின் நெல்லை கிழக்கு மேற்கு, மாவட்டங்கள் மற்றும் மாநகர காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான தேர்தல், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்டக் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்டத் தலைவர் சிவகுமார். மேற்கு மாவட்டத் தலைவர் பழனி நாடார் மற்றும் மாநகரக் காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான மாவட்டத் தேர்தல் அலுவலராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரதாப்வர்மா தம்பானும், வட்டார பூத் கமிட்டித் தேர்தல் அலுவலராக அழகுவேலுவும் முன் நின்று பணியாற்றினர்.

இதில் நாங்குனேரி ஸ்தாபன காங்கிரஸ் உறுப்பினர், முத்துக்கிருஷ்ணன், வெள்ளச்சாமி உள்ளிட்ட சிலரும் தேர்தலைப் பார்வையிட வந்திருந்தனர். மேலும் இவர்கள் தேர்தலில் போட்டியிடவும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். பின்னர் மாலையில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாங்குனேரி ஸ்தபான காங்கிரஸ் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பிருந்த முத்துகிருஷ்ணன் வெள்ளச்சாமி உள்ளிட்ட சிலர் இதனை ஏற்க மறுத்ததோடு தாங்கள் இதில் போட்டியிட விண்ணப்பிருந்த நிலையில் நிர்வாகிகள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு தங்களுக்கு வேண்டியவர்களைத் தேர்வு செய்ததாகக் குற்றம் சாட்டினர். அதனால் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட எதிரணியினரின் ரகளையில் அங்கு சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

தேர்தலை நடத்தும் அலுவலரைச் சந்தித்து முறையிட்ட முத்துக்கிருஷ்ணன், வெள்ளச்சாமி உள்ளிட்டவர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தாங்களின் வேட்பு விண்ணப்பங்களைத் தாங்களே கண்டெடுத்ததாகக் கூறி அவைகளைக் காண்பித்தனர். இதன் காரணமாக நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தள்ளு முள்ளும் ஏற்பட்டது. இதன் சூழ்நிலைகளை ஆராய்ந்த தேர்தல் அலுவலரான பிரதாப் வர்மா தம்பான் தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. தகவல் போய் ஸ்பாட்டுக்கு வந்த பாளை இன்ஸ்பெக்டர் பெரியசாமி அங்கிருந்த நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்