புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்த ஒரு மாணவிக்கு கடந்த வாரம் 15 ந் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது. தொடர்ந்து அவர் 108 ஆம்புலன்சில் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. 30 வாரங்களுக்குள் குறைப் பிரசவமாக பிறந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 17 ந் தேதி பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவத்தில் சிறுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்து ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தந்தையான சிலம்பரசனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து, மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அறந்தாங்கிப் பகுதியில் பரபரப்பையும், பெற்றோர்களுக்கு பதைபதைப்பையும் ஏற்படுத்தியிருந்தது
இந்நிலையில் இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பே அதே அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவி ஒருவர் கர்ப்பமாக இருப்பது பெற்றோர்களால் கண்டறியப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளி மாணவியான சிறுமிக்கு சில நாட்களாக வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் சிறுமியின் தாயார் சிறுமியை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனையடுத்து சிறுமி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் 3 மாதங்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் செப்டிக் டேங்க் பிளம்பிங் வேலை செய்ய வந்த அறந்தாங்கி மணிவிளான் 7 ம் வீதியை சேர்ந்த விக்னேஷ் (23) என்பவர் பிளம்பிங் வேலை செய்யும்போது நட்பாக பழகி அடிக்கடி போனிலும் பேசியவர் என்னை தனிமையில் சந்தித்து வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்ததாக புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து விக்னேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் ஒரே அரசுப் பள்ளியில் அடுத்தடுத்து 2 மாணவிகள் கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டது பெற்றோர்களிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசும் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.