தமிழகத்தில் நான்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை முழுமையாக கரோனா வைரஸ் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவமனையாக அரசு மாற்றியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வருமுன் எச்சரிக்கை என்பது போல ஏறக்குறைய 10 பேர் தனி அறையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பற்றாக்குறை ஏற்பட்டு ஏதாவது அவசர தேவை ஏற்பட்டால்..? அதற்குதான் ஒரு முன்னுதாரனமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கட்சி அலுவலகம் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கை அப்படியே இந்த சிகிச்சைக்காக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தார்.
அதன் பிறகு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியும் அறிவிப்பு கொடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை தியாகராயநகரில் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ளது. சென்ற மூன்று வருடங்களுக்கு முன்புதான் கட்சி அலுவலகம் பல மாடிக் கட்டிடங்களாக கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு, கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலுள்ள இரண்டு தளங்களை அதாவது 74 ஆயிரம் சதுர அடியை சிகிச்சைக்காக எடுத்துக்கொள்ளலாம் என மாநிலச் செயலாளர் முத்தரசன் அறிவிப்பு கொடுத்துள்ளார்.
மக்கள் நலனுக்காக வீதியில் இறங்கி போராடுவது மட்டும் இயக்கமல்ல இது போன்ற ஆபத்து நேரத்தில் அந்த மக்கள் நலன் பெற கட்சி அலுவலகம் உதவும் என்பதையும் தி.மு.க.வினர் மற்றும் கம்யூனிஸ்ட்கள் நிருபித்துள்ளார்கள்.