சேலத்தில், மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர், ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டி வரும் அசோக், நாராயணன், பிரபு, வேல்முருகன், இளங்கோவன், மணிகண்டன் ஆகிய ஆறு பேர், வெள்ளிக்கிழமை (ஏப். 29) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர்.
அவர்கள் திடீரென்று தங்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதை சற்றும் எதிர்பாராத, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து, அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை பிடுங்கி வீசி எறிந்தனர். உடலில் தண்ணீர் ஊற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அவர்களை ஆசுவாசப்படுத்திய காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியது, ''சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நாங்கள் 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரம், அர்த்தநாரி, விஜய் உள்ளிட்ட நான்கு ரவுடிகள் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்றால் மாதந்தோறும் ஆட்டோ ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டோ ஓட்ட அனுமதிக்க முடியாது என மிரட்டி வருகின்றனர்.
ஆட்டோவில் ஏறும் பயணிகளையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி இறக்கி விடுகின்றனர். இதனால் எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதுபற்றி பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மன வேதனையில் இருப்பதை விட சாவதே மேல் என நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றோம்,'' என்றனர்.
மேலும் அவர்கள், பணம் கேட்டு மிரட்டுவதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ள மூன்று ரவுடிகள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாமானியர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொள்ளாததால் தான், ஆட்சியர் அலுவலகம் முன்பு இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு, மெத்தனமாக செயல்படும் காவல்துறையினர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.