Skip to main content

மழையை சபிக்கும் நகர்ப்புற மக்களும், கிடா வெட்டி கொண்டாடும் விவசாயிகளும்!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Urban people cursing the rain, and farmers enjoying the rain

 

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை போன்ற கடற்கரை மாவட்டங்கள், மாநகரங்கள், நகரங்கள் ஆகியவை தண்ணீரில் மிதக்கின்றன. மழையின் வெள்ளத்தால் அப்பகுதி மக்கள், உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். மற்றொருபுறம் மழையால் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. அதனை விவசாயிகள், பூ தூவியும், கெடா வெட்டியும் கொண்டாடுகிறார்கள்.

 

கோடைக்காலம், மழைக்காலம், பனிக்காலம் வருவது என்பது மக்களுக்குத் தெரியும். அதற்கு தகுந்தார்போல் மக்கள் தயாராவார்கள். தமிழ்நாட்டில் மழைக்காலம் என்பது 5 மாதங்கள். வடகிழக்கு பருவமழை, தென்கிழக்கு பருவமழை, சித்திரை மாத கோடை மழை என மழை பெய்கிறது. கிராமப்புறங்களில் விவசாயிகள், வியாபாரிகளுக்கு மழைக்காலம், கோடைக்காலம் அத்துப்படி. அதற்கு தகுந்தார்போல் தங்களது தொழிலை, விவசாயத்தைத் திட்டமிடுவார்கள்.

 

மழைநீர் செல்லவும், கழிவுநீர் செல்லவும் முறையான வடிகால் வசதியில்லாமல் கட்டுமானங்கள் இருப்பதால், நகர்ப்புறங்களிலும், மாநகரங்களிலும் அதிகமான மழையின்போது பெரும் வெள்ளம் ஏற்படுகிறது. இது மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் மழையை சபிக்கிறார்கள்.

 

கிராமப்புறங்களில் மழை வந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். ஆறு, ஏரி, குளங்கள் நிரம்பினால்தான் குடிக்க தண்ணீர் கூட எடுக்க முடியும் என்ற நிலை. அதனால் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்து பயிர் செய்யப்பட்ட நிலங்களைப் பாழ்படுத்தினாலும் விவசாயிகள் இன்னும் சில ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்சம் வராது, நிலத்தடி நீர் மட்டம் குறையாது என துக்கத்திலும் சந்தோஷப்படுகிறார்கள்.

 

தற்போது பெய்துவரும் இந்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் சுற்றிவருகிறார். இந்தப் பெருமழை தங்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு வாழவைக்கும் என ஏரி நிரம்பி வழிந்ததை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியின் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது எம்.எல்.ஏ. நந்தகுமார், மாவட்ட ஒன்றியக்குழு பெருந்தலைவர் சேர்மன் பாபு போன்றவர்களை வரவைத்து சாமி கும்பிட்டு, கிடா வெட்டி விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளனர்.

 

வேலூர் மாவட்டம் மட்டுமல்ல, பாலாறு பாயும் திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களிலும், தென்பெண்ணையாறு ஓடும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கொடிளம் ஆறு பாயும் பகுதியென மழையை மட்டுமே நம்பியுள்ள பெரும்பாலான கிராம மக்கள் தங்களது கிராம ஏரி, குளங்கள், ஆறுகளில் வழக்கத்தைவிட அதிகமாக மழைநீர் வந்ததும் கொண்டாடிவருகிறார்கள்.

 

இயற்கையை சபிப்பதை விட்டுவிட்டு கேரளா மாநில மக்களைப்போல் இயற்கையோடு இணைந்துவாழ பழகிக்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் குடையுடனே பயணத்தை மேற்கொள்வார்கள். காரணம், மழை எப்போது வேண்டுமானாலும் வரும் என்கிற கருத்து அவர்கள் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது. அதேபோல் இங்கும் அதிகமான மழைவந்தால் தங்கள் பகுதி எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு மக்கள் வாழ வேண்டும். மக்கள் அப்படி வாழ்கிறார்களா என்பதைக் கண்காணித்து சரிப்படுத்த வேண்டிய மிக முக்கிய பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அப்படி அவர்கள் செய்திருந்தால், கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றிருந்தால் தமிழ்நாட்டின் தலைநகரத்தின் ஒருபகுதி இப்படி தத்தளித்துக்கொண்டிருக்காது, மழையை சபித்துக்கொண்டிருக்காமல் கிராமப்புற மக்களைப்போல் கொண்டாடிக்கொண்டு இருந்திருப்பார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்