சேலம் அருகே, ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால் ரொட்டிக்கார வட்டம் என்ற சிறு கிராமமே தண்ணீரில் தத்தளிக்கும் வினோதமான பிரச்னையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
சேலம் மாநகராட்சி எல்லையையொட்டி இருக்கிறது தளவாய்பட்டி. இந்த பஞ்சாயத்தின் ஒரு பகுதிதான் ரொட்டிக்கார வட்டம். இந்தப்பகுதியில் காலங்காலமாக பன், வருக்கி போன்ற பேக்கரி உணவுகளை குடிசைத் தொழில்போல் செய்து வருவதால், ரொட்டிக்கார வட்டம் என்ற பெயர் வந்துள்ளது. நூற்றுக்கும் குறைவான குடும்பங்கள் வசிக்கும் சிறு வட்டம். ஆவின் பால்பண்ணையின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைந்திருக்கிறது ரொட்டிக்கார வட்டம்.
தளவாய்பட்டி கிராம மக்களிடம் இருந்து நிலத்தைப் பெற்று தொடங்கப்பட்டதுதான், சேலம், நாமக்கல் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் எனப்படும் ஆவின் பால் பண்ணை. 54 ஏக்கர் பரப்பளவு கொண்டது இந்நிறுவனம். எந்த நிறுவனத்திற்காக நிலத்தைக் கொடுத்தார்களோ அதே ஆவின் நிர்வாகம்தான் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப் போட்டிருக்கிறது என்கிறார்கள் தளவாய்பட்டி, ரொட்டிக்காரவட்டத்தைச் சேர்ந்த மக்கள்.
தளவாய்பட்டி சிவராமன் என்ற இளைஞர் ரொட்டிக்காரவட்டம் பகுதிக்கு நம்மை அழைத்துச்சென்றார். வியாழக்கிழமை (அக். 17, 2019) மாலை 3.30 மணியளவில் நாமும் அந்தப் பகுதிக்குச் சென்றுவிட்டோம். முதலில் ராமசாமி மகன் சண்முகம் (40) என்பவர் வீட்டைப் பார்வையிட்டோம்.
சுமார் 400 சதுர அடி கொண்ட அந்த வீடு முழுக்க முழுக்க நிலத்தடி நீரூற்று காரணமாக மிதந்து கொண்டிருந்தது. நாம் சென்றபோது சண்முகம், வீட்டு அறைக்குள் தேங்கியிருந்த ஊற்று நீரை மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்றிக் கொண்டிருந்தார். அவருடைய தந்தை ராமசாமியோ (72) சமையல் அறையில் தேங்கிய ஊற்று நீரை பிளாஸ்டிக் முறத்தால் அள்ளி அள்ளி வெளியே ஊற்றிக்கொண்டிருந்தார். அந்த வயதில் அவருக்கு அத்தகைய எக்சர்சைஸ் (!) தேவையற்ற சுமைதான். இன்னொரு அறையில், தண்ணீர் மீது போடப்பட்டிருந்த கட்டிலில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சண்முகத்தின் தாயார் படுத்திருந்தார்.
சண்முகம் நம்மிடம் பேசினார்.
''நாங்கள் இந்த இடத்தில் 1970ல் இருந்து குடியிருக்கிறோம். என்றைக்கு இந்த பகுதியில் ஆவின் பால்பண்ணை வந்ததோ, அப்போது இருந்தே ரொட்டிக்கார வட்டம் பகுதி மக்களுக்கு பிரச்னை ஆரம்பித்துவிட்டது. பால் பண்ணையில் பல ஏக்கர் நிலத்தில் தேவையற்ற கழிவு நீர் தேக்கி வைக்கப்படுகிறது. அதனால் இயல்பாகவே இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் எப்போதும் உயர்ந்தே உள்ளது. 3 அடி பள்ளம் தோண்டினாலே ஊற்று நீர் வந்துவிடும். சிமென்ட் தரைக்கு மேல் நீரூற்று 'குபுகுபு'வென வந்து கொண்டிருக்கிறது. ஒரு மணி நேரத்தில் எங்கள் வீடு முழுவதும் தண்ணீரால் நிரம்பி விடும்.
இந்தப் பகுதியில் எங்கள் குடும்பம்தான் முதன்முதலில் பேக்கரி தொழிலை தொடங்கியது. இங்குள்ள ஒரு வீட்டில்தான் பேக்கரி உணவுப்பொருள்களை தயாரித்து வந்தோம். நிலத்தடி நீரால் மண் சுவர் ஊறிப்போய் பத்து ஆண்டுக்கு முன்பு அந்தக்கூடம் இடிந்து விட்டது. அத்தோடு எங்கள் தொழிலும் முடங்கியது. இப்போது எங்களிடம் தொழில் கற்றுக்கொண்ட ஒருவரிடமே நான் கூலி வேலைக்குச் சென்று வருகிறேன். மழைக்காலம் வந்தால் எங்கள் நிலை இன்னும் மோசமாகி விடும். யாராவது ஒருவர் பொழப்பை எல்லாம் விட்டுவிட்டு, வீட்டில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்தும் வேலைகளைச் செய்தே ஆகணும். நாங்கள் எல்லாம் நரக வேதனையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,'' என்கிறார் சண்முகம்.
குப்புசாமி, ரதி, சந்திரன், மல்லிகா, சரவணன், பாப்பா, சின்னதுரை உள்பட 11 குடும்பத்தினர் நிலத்தடி நீரூற்றால் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வீடுகள் பெரும்பாலும் மண் சுவரால் ஆனவை. தாழ்வான பகுதியில் வீடுகள் அமைந்திருப்பதும் இந்த அவல நிலைக்கு இன்னொரு காரணம். சந்திரன் (72) என்பவரின் ரொட்டி தயாரிப்புக்கூடமும் நிலத்தடி நீரூற்றால் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. 'ஆடு, மாடுகள் கட்டறதுக்கான முழக்குச்சி அடிச்சாலே தண்ணீர் பீறிட்டுக்கிட்டு வந்துடும்ங்க', என்கிறார் இன்னொரு முதியவர்.
இப்பிரச்னை குறித்து தகவல் அறிந்த ஆவின் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஆவின் தலைவர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை, இரும்பாலை காவல்துறை, எஸ்பிசிஐடி அதிகாரிகள் ரொட்டிக்காரவட்டம் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
அபரிமிதமான நிலத்தடி நீரூற்று, குடியிருப்புகளை மட்டுமின்றி வயல்வெளிகளையும் புரட்டி எடுத்திருக்கிறது. மாரியம்மாள் என்பவருக்குச் சொந்தமான வயலில் நீரூற்று காரணமாக இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கிறது. கால்நடைகளுக்கான தீவனப் பயிர்கள் விளைந்தும், வயலில் தேங்கியுள்ள தண்ணீரால் அறுவடை செய்ய முடியாத நிலை. 'இப்படிலாம் இருந்தா நாங்க மாடு கன்னுகளை எப்படி வளர்த்த முடியும்? நாங்க வாழறதா சாவறதா?,' என்று புலம்பினார் மாரியம்மாள். அமிர்தம் என்பவரின் வயலிலும் நீரூற்று தேங்கியிருப்பதால் அவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளியங்கிரி என்பவருக்குச் சொந்தமான வயல்வெளி கிட்டத்தட்ட குளம்போலவே மாறி இருந்தது. தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதி இல்லாததால், டெங்கு பரப்பும் ஏடிஸ் எஜிப்ட் வகை கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. அந்தப் பகுதியில் பலரும் சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருக்கின்றன.
மக்களிடம் பொறுமையாக பிரச்னைகளை கேட்டறிந்தார் ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு. எந்த வித பந்தாவும் இல்லாமல், 'நக்கீரன் சார்... ரொட்டிக்கார வட்டம் மக்களுக்கு உடனடி தேவை என்ன? உங்கள் தரப்பு யோசனைகள் என்ன?,' என்று கொஞ்சமும் பந்தா இல்லாமல் நம்மிடமும் கேட்டார்.
''கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீரூற்றால் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் 11 குடும்பங்கள் வசிப்பதற்கு மாற்று இடம் உடனடியாக தேவைப்படுகிறது. ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை உடனடியாக குழாய் மூலம் தளவாய்பட்டி ஏரி அல்லது திருமணிமுத்தாற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,'' என்றோம்.
அதற்கும் அவரும் உடனடியாக சம்மதம் சொன்னார். மேலும், இது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்போம் என்றவர், உடனடியாக ஆவின் கூட்டரங்கில் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். மாலை 6.45 மணியளவில் கூட்டம் கூடியது. ஊர்மக்கள் மற்றும் ஊடக பிரதிநிதியாக நாமும் பங்கேற்றோம்.
தளவாய்பட்டி, ரொட்டிக்கார வட்டம் சார்பில் சிவராமன், தங்கராஜ், தோழர் சுந்தரம், ஆகியோர் பேசினர். அவர்கள், ''ஆவின் பால் பண்ணைக்கு நிலம் வழங்கிய 33 குடும்பத்தினருக்கு பட்டா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பட்டா கிரய செலவுகளை ஆவின் நிர்வாகமே ஏற்க வேண்டும். பண்ணையில் கழிவு நீர் தேங்காதவாறு குழாய் மூலம் அப்புறப்படுத்த வேண்டும். அதனால்தான் எங்கள் கிராமங்களில் நிலத்தடி நீர் எதிர் ஊற்றுபோல் வந்து கொண்டிருக்கிறது. நீரூற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். பால் பண்ணை கழிவு நீரால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எங்கள் ஊரில் சிஎஸ்ஆர் நிதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர வேண்டும்,'' என்றனர்.
மக்களின் கோரிக்கைகளை கவனமும் கேட்டுக்கொண்ட ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, ஆவின் நிர்வாகம் செய்ய உள்ள பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
''பாதிக்கப்பட்ட 11 குடும்பங்கள் தங்குவதற்கு தற்காலிகமாக மாற்று இடவசதி செய்து தரப்படும். அவர்களுக்கு தமிழக முதல்வரின் பசுமை வீடு திட்டத்தில் வீடு வழங்கப்படும். ஆவினுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கிரய செலவு 33 லட்சம் ரூபாய் வரை ஆகும். அதை ரத்து செய்யவும் அரசிடம் கோரி வருகிறோம். அல்லது ஆவின் நிர்வாகமே அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்ளும்.
ஆவின் பால் பண்ணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர், கழிவு நீர் அல்ல. அந்த நீரால்தான் உங்கள் ஊரில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவு உயர்ந்திருப்பதாகச் சொல்வது முழுமையான காரணமாக ஏற்க முடியாவிட்டாலும் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக்கருதுகிறேன். ரொட்டிக்கார வட்டம் கிராமம், புவியமைப்பு படியே தாழ்வான பகுதியாக அமைந்துள்ளது. மேலும், இந்தப் பகுதியில் இயற்கையிலேயே நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் உள்ளது. இப்போது மழைக்காலம் என்பதால் நீரூற்று வெளியேறி வருகிறது. இருந்தாலும் எங்கள் தரப்பில் எந்த தவறுகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்கிறோம்.
நிலத்தடி நீர் மாசு குறித்து ஆய்வு செய்யப்படும். மருத்துவ முகாம் நடத்தப்படும். இப்போதைக்கு உடனடியாக நாளையே (இன்று, அக். 18) உங்கள் கிராமத்தில் கொசு ஒழிப்பு மருந்து அடிக்க ஏற்பாடு செய்யப்படும். பண்ணையில் உள்ள தண்ணீர் வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், ஆவினிடம் இருந்து பட்டா வாங்கித் தருவதாகக் கூறி சிலர் பணம் வசூலிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. ஆவின் நிர்வாகத்தை மிரட்டிப் பார்க்கலாம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார் விஜய்பாபு. அப்போது அவர் சொன்ன ஒரு வார்த்தைக்கு, ஊர் மக்கள் அதிருப்தி தெரிவித்ததால் சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டு அடங்கியது.
இரவு 7.45 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டம் சுமூகமாக முடிந்தது. நாமும் இல்லம் நோக்கிக் கிளம்பினோம். கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடிக்கும் பிரச்னை இப்போது தீர்வை நோக்கி.