தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு நேரடியாக சென்று நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான பணிகள் குறித்து நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ''தமிழக முதல்வர் மானியக் கோரிக்கையில் கோவில் திருப்பணிக்காக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். அதேபோல் மிக பழமையாக இருக்கக்கூடிய சுமார் 80 க்கும் மேற்பட்ட கோவில்கள் திருப்பணிக்காக 100 கோடி ரூபாய் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற ஜூலை மாதம் 6 ஆம் தேதி கோவில் பணியாளர்கள் இணைந்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான தேதி, கிழமை, நாள் உள்ளிட்டவற்றை கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இந்த ஆண்டு மிக சிறப்பாக உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெறும்
தற்போது நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் நேரில் பார்வையிட்டுள்ளோம். அந்த பணிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. பணிகள் குறித்து அவ்வப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவும் மேற்பார்வை செய்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டிய நிலையில் 12 ஆண்டுகள் முடிந்து கரோனா நோய் தாக்கத்தால் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் போனது. இந்த ஆண்டு மிக சிறப்பாக நடைபெறும்'' என்று கூறினார்.