Skip to main content

பருவம் தவறிய கனமழை; விவசாயிகளுக்கு முதல்வரின் நிவாரண உதவி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Unseasonal heavy rain! Chief Minister's Relief Aid to Farmers !!

 

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பருவம் தவறிய கனமழையால் தமிழ்நாடு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதில் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேலும் மகசூல் இழப்பு ஏற்பட்ட நெற்பயிர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயும் நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிர் வகைகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயாகவும் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

 

இந்த நிலையில், முதலமைச்சரின்  அறிவுரையின்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர். இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் சேதமடைந்ததை அதிகாரிகள் கணக்கெடுத்துள்ளனர். பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் வழங்க ஆணையிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

 

இந்த நிவாரண உதவியானது தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மு.க.ஸ்டாலின்  அறிவுரையும் வழங்கியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் அரசு அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்