அடிப்படை தத்துவவியல் துறையில் முதுகலைக்கான பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவன் கிருபாமோகன் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்ட காரணத்தால், நீக்கச் சொல்லி ஆகஸ்ட் 29 ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி கிருபாமோகனை அழைத்து, “ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி அட்மிஷனை ரத்து செய்ய வற்புறுத்துகிறார்”. என்று அந்த மாணவரிடம் தெறிவித்துள்ளார்.
இந்தநிலையில்தான் 4 ம் தேதி கிருபாவை அழைத்து துறைத்தலைவர் அட்மிஷனை ரத்து செய்து அதற்கான சான்றிதழை அவரது கையில் கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த மாணவன் அந்த சான்றிதழை வாங்க மறுத்துள்ளார். இந்த நிலையில் சென்னை பல்கலைகழகத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கிருபா எனது கல்வி சான்றிதழ்களிலோ கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன். அதற்கான பதிலும் இல்லை, வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா! என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்” என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார். ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை, முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷ்ஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார்.
சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும். தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது. மேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது.
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல்தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக, அம்பேத்கர் பெரியாரின் கருத்துகளை பேசியதற்காக, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது. இது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.
ஜனநாயக நாட்டில் ஒரு மாணவன் தன்னுடைய சுய சிந்தனையை வெளிப்படுத்தினால் அவரை கல்லூரியில் இருந்து நீக்குவோம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த அரசு இதன் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது.