கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எல். முருகனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், எல். முருகன் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத நிலையில், அவர் எந்த மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக இருந்த மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்துவருகிறது. இதனால், மத்தியப் பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எல். முருகனை வேட்பாளராக அறிவித்தது அகில இந்திய பாஜக தலைமை. அதைத் தொடர்ந்து எல். முருகன் போட்டியின்றி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, பல்வேறு மாநிலங்களின் பாஜக தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேசிவருகிறார். அந்த வகையில், இன்று (04/10/2021) மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பிரதமருக்கு நினைவு பரிசாக திருக்குறள் புத்தகத்தை வழங்கினார் எல். முருகன்.