கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகளை மத்திய அமைச்சர் பாராட்டியதாக தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''இன்று தமிழ்நாடு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் வேகமாக ஒமிக்கிரான் உருமாற்றமான வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னால் வரை ஒட்டுமொத்த இந்தியாவிலும் நூற்றுக்கும் கீழே... ஏன், 50க்கும் கீழே என்ற அளவில் கரோனா பரவல் இருந்தது. தமிழ்நாட்டில் அதிகபட்ச பரவல் இரண்டு என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது. ஆனால், நேற்றைக்கு அது 386 என்ற அளவில் உயர்ந்திருப்பது உண்மை. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த அளவா என்றால் அல்ல, கடந்த 24 மணிநேரத்தில் இந்திய அளவில் 5,878 பேருக்கு இந்த பாதிப்பு உருவாகி இருக்கிறது. கேரளாவைப் பொறுத்தவரை 2,873 பேருக்கும், டெல்லியைப் பொறுத்தவரை 484 பேருக்கும், இமாச்சலப் பிரதேசத்தில் 422 பேருக்கும், தமிழ்நாட்டில் 386 பேருக்கும் என்ற வகையில் கரோனா பரவி இருக்கிறது.
தமிழக முதல்வர் கரோனா பரவல் அதிகரித்தபோதே சம்பந்தப்பட்ட மருத்துவத் துறையின் அதிகாரிகளை அழைத்து உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினார். கடந்த ஏழாம் தேதி ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ஒரு காணொளி வாயிலாக கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் நானும் கலந்துகொண்டு தமிழ்நாடு எடுத்த நடவடிக்கைகளை தெளிவுபடுத்திப் பேசினேன். அவர் வெளிப்படையாக அனைத்து அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் தமிழ்நாட்டின் செயல்பாடுகளை மிக வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்'' என்றார்.