மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வி.கே. சிங் கடந்த 23 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதில் ஒரு நிகழ்ச்சி திருமயம் ஒன்றியம் சேதுராப்பட்டி ஊராட்சி ஓச்சம்பட்டி கிராமத்தில் வீடு கட்டி முடியும் நிலையில் உள்ள வீட்டிற்கு பாஜகவினர் மத்திய இணை அமைச்சரை அழைத்து வந்து போலியாக அடிக்கல் நாட்டியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே ஊராட்சியைச் சேர்ந்த 1வது வார்டு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினருமான முருகானந்தம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மெர்ஸி ரம்யாவிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “எனது 1வது வார்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 2021 ஆம் நிதியாண்டில் 5 நபர்களுக்கும், 2022 ஆம் நிதியாண்டில் ஒரு நபருக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் நகோமி ராஜா, மீனாட்சி மாரிமுத்து ஆகிய இருவரும் வீடுகள் கட்டி முடித்துள்ளனர். காளிமுத்து ஆறுமுகம், துரை முத்து, செல்வி சண்முகம் ஆகிய 3 பயனாளிகளும் இன்னும் வீடுகள் கட்டத் தொடங்கவில்லை. கருப்பாயி முத்துக்கருப்பன் வீடு கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி வீடு கட்டி வரும் கருப்பாயி முத்துக்கருப்பன் வீடு உள்பட 9 வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங்கை அழைத்து வந்து பாஜகவினர் அடிக்கல் நாட்டியுள்ளனர். பயனாளிகளாகத் தேர்வு செய்யப்படாத பலரும் இந்த நிகழ்வில் போலி பயனாளிகளாக கலந்து கொள்ள வைத்துள்ளனர். ஆகவே சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் இப்படி ஒரு விழாவை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் ஒரு மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் விழாவிற்கு அரசு அதிகாரிகளையோ, உள்ளாட்சி பிரதிநிதிகளையோ அழைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த புகார் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.