2020- 2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (01/02/2020) மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு, நாடுமுழுவதும் உடான் (UDAN) திட்டத்தின்கீழ் புதிதாக 100 விமான நிலையங்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 30,757 கோடி ரூபாய் ஒதுக்கீடு, புதிய உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான லடாக் மேம்பாட்டிற்காக 5958 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. சுமார் 2 மணி 43 நிமிடங்கள் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மூலம் மிகநீண்ட பட்ஜெட் உரையை வாசித்த இந்திய நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை திரு.வி.க நகர் பேருந்து நிலையத்திற்கு அருகே சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் வகையில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது. குடியுரிமை சட்டத்தால் நாட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அதிமுகதான் காரணம். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக பேரவையில் தனித் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. நம் தாய், தந்தையின் பிறந்த தேதிகள் போன்ற தகவலை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், சிஏஏவுக்கு எதிரான கையெழுத்து இயக்க பிரதிகள் குடியரசுத் தலைவரிடம் வழங்கப்படும்" என்றார்.