இந்தியாவிற்கே ஏன்...உலக அரங்கில் பெருமை சேர்க்கும் அறிஞர்களில் ஒருவர் ஆனந்த் டெல்ட்டும்ட்டே.
பேராசிரியர்,இடதுசாரி மார்க்சீய சிந்தனையாளர், எழுத்தாளர் இவர் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள பீமாகோரேகன் போராட்ட நிகழ்வில் சதி செய்திருப்பதாக போலீசார் இவரை கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. என தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இந்த கைது நடவடிக்கையைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.
இது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமாநில தலைவர் பேராசிரியர் சொக்கலிங்கம் பொதுச் செயலாளர் எழுத்தாளர் இரா.காமராசு ஆகியோர்
"ஆனந்த் டெல்ட்டும்ட்டே மனித உரிமைப் போராளி,ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காக புதிய கோணங்களில் அம்பேத்கரியத்தையும் மார்க்சியத்தையும் பல பரிமாணங்களில் வளர்த்தெடுத்தவர். அது மட்டுமல்ல இவர் ஒரு களப்போராளி.தம் கருத்துக்களை வெளிப்படையாக உலகப்புகழ்பெற்ற பத்திரிகைகளில் வெளிப்படுத்தி வருபவர்.
ஊடகவியலாளர் ரொமீலாதாப்பர் குறிப்பிட்டது போல முதன் முதலாக ஒரு தலித் ஆய்வாளர் ஆங்கில இதழில் தொடர் பத்தி எழுத்தாளராக இருப்பது இவரே.
இவரது ஆய்வுகள் எப்போதுமே சமூக கரிசனம் மிக்கது. ஒடுக்கப்பட்டோர் உரிமை மறுக்கப்பட்டோர் பக்கம் நிற்பது.சமூக அறிவுப்புலம் இவர் ஆய்வுகளால் வளம் பெற்றது. உலக அறிஞர்கள் கவனத்தை ஈர்த்தது. இத்தகைய அறிஞர்களைக் கைது செயவது சுதந்திரமான சிந்தனைகளை வழிமறிக்கும்.எதிர்கால இந்திய வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்களைத் தடுக்கும்.
கவிஞர்கள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் எப்போதுமே நிறுவனங்கள் அதிகார மையங்கள் பொதுச் சிந்தனைப்போக்கு இவைகளோடு இணைந்து செல்லமாட்டார்கள்.இவர்கள் சிந்தனைகள் தனித்தே இயங்கும். அவை நாளைய பொதுப்போக்காக மாறும்.
இத்தகைய சிந்தனையாளர்களைப் பாதுகாப்பதும் அவர்களை மதித்துப் போற்றுவதும் மக்கள் நல அரசின் கடமை. எனவே மத்திய அரசின் உரியதுறைகள் தலையிட்டு ஆனந்த் டெல்ட்டும்ட்டே இன்னும் இவர் போன்ற மக்கள்சார் அறிஞர்களை கைது செய்திருப்பதை திரும்ப பெற்று உடனடியாக விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள், சமூக போராளிகள் மீது அடக்கு முறை சட்டங்கள் ஏவுவது ஜனநாயகத்தை சீர்குலைப்பதோடு சர்வாதிகார கண்ணோட்டத்தையே காட்டுகிறது " என்றனர்.
பேராசிரியரும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்ட்டும்ட்டே கோவா மாநில பல்கலைகழகத்தில் ஆய்வு பேராசிரியராக உள்ளார். இவர் மீது UAPA என்ற தேச பிரிவினை வழக்கை பதிவு செய்து மகாராட்டிரா போலீசார் கைது செய்துள்ளனர் . இந்த கைது சம்பவம் சென்ற வாரத்தில் நடந்துள்ளது. இதுவரை இது பற்றி யான தகவலையும் பெரிய அளவில் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்திய உளவுத்துறை. அம்பேத்காரிய, மார்க்சீய அறிஞரான ஆனந்த் டெல்ட்டும்ட்டே வின் மனைவியும் கல்லூரி பேராசிரியர் தான் சட்ட மேதை அன்னல் அம்பேத்காரின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.