புதிய மாவட்டமாக உதயமாகியிருக்கும் 'மயிலாடுதுறை' நகரத்தின் மிகப்பெரிய சாபக்கேடாக மாறியிருக்கிறது பாதாளச் சாக்கடை திட்டம். அடுத்தடுத்து ஏற்படும் உடைப்புகளால் பொதுமக்களும், பாதசாரிகளும் பெருத்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். 'இது எப்போது வேண்டுமானாலும் பேராபத்தை உண்டாக்கும்' என்கிறார்கள் நகர மக்கள்.
மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பட்டுவருகிறது. திட்டம் துவங்கிய காலங்களில் இருந்தே பல குளறுபடிகள் இருப்பதாகக் கண்டனக் குரல்கள் ஒலித்தபடியே இருக்கிறது. பாதாளச் சாக்கடையில் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய 'ஆறுபாதி' என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையமும் கவனிப்பில்லாமல் கிடக்கிறது.
இந்தச் சூழலில் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் பாதாளச் சாக்கடை குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பாதாளமாக உள்வாங்கி, பொதுமக்களை அச்சுறுத்திவருகிறது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 16 முறை மிகப்பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் துயரை உண்டாக்கியிருக்கிறது.
இந்தநிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (தற்காலிகம்) எதிரே தரங்கம்பாடி மயிலாடுதுறை பிரதான சாலையில், பாதாளச் சாக்கடையின் பிரதானக் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், அந்தப் பகுதியே பாதாளமாக மாறியது. போக்குவரத்து குறுகலான வழிகளில் மாற்றிவிடப்பட்டுள்ளது. அந்த வழிகளிலும் எப்போது வேண்டுமானாலும் பாதாளச் சாக்கடை உள்வாங்கலாம் என்கிற நிலையிலேயே இருக்கிறது. 'இந்தப் பேராபத்துக்களுக்கு மூலக்காரணமே நகராட்சி மற்றும் பராமரிப்பாளர்களின் அலட்சியமும் ஊழலும்தான் என்கின்றனர்' அப்பகுதி மக்கள்.
இந்தநிலையில், புதிய பைப் பதிப்பதற்காக 2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மயிலாடுதுறை எம்.எல்.ஏ.ராதாகிருஷ்ணனும், அதிமுக மாவட்டச் செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதனும் வழக்கம்போல் பாதாளச் சாக்கடைக்கு பூஜைபோட்டு துவங்கி வைத்துள்ளனர். இது அந்தப் பகுதி மக்களுக்கு மனநிம்மதியைத் தந்திருந்தாலும், 2.75 கோடியில் ஒரு கோடிக்காவது வேலை செய்வார்களா என்கிற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நாஞ்சில்நாட்டைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் கூறுகையில், "இந்தமுறை பீங்கான் மாதிரியான பைப் போடப் போவதாகக் கூறியிருக்காங்க. அது வரவேற்கத்தக்கது. இந்த பைப் பிரதான சாலைக்கு மட்டுமே போடப்போறாங்க. இங்கு பாதாளச் சாக்கடை திட்டம் மொத்தம் 86 கிலோமீட்டர் கொண்டது. முழுவதும் போடுவது, தற்போது சாத்தியம் இல்லாதது. அதேவேளையில் இந்தத் திட்டம் 15,000 இணைப்பு மட்டுமே கொண்டது. ஆனால், தற்போது 28 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. இதற்கு முழு காரணம் நகராட்சி நிர்வாகத்தின் குளறுபடியும், பராமரிப்பாளர்களின் லாபநோக்கமும் தான்'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "எட்டு பம்பிங் செக்சனில் 16 பிரதான மோட்டார்கள் இருக்கவேண்டும். அதில், அதிக குதிரை திறன்கொண்ட மோட்டார்கள் எதுவும் செயல்படவில்லை. மிக மிகக் குறைந்த குதிரை திறன்கொண்ட மோட்டார்கள் மட்டுமே இயங்குகிறது. அதோடு 24 மணி நேரமும் அந்த மோட்டார்கள் இயங்கவேண்டும். ஆனால் தற்போது பராமரிப்பு செய்து வருபவர்கள் பாதி நேரம்கூட மோட்டாரை போடுவதில்லை. அதற்குக் காரணம் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கு மேல், வருடத்திற்கு 15 லட்சம் கரண்ட்பில் வரும், அதில் பாதியை ஆட்டையைப் போடுகின்றனர். அதேபோல் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கவேண்டும். ஆனால், தற்போது 12 பேர் தான் இருக்கிறார்கள்.
150 குதிரைதிறன் கொண்ட நாஞ்சில்நாடு பம்பிங் செக்சன் மோட்டார்தான் மிக முக்கியமானது. அந்த மோட்டார் ஓடவே இல்லை. பிறகு எப்படிப் பாதாளச் சாக்கடை உடைப்பு ஏற்படாமல் இருக்கும். மெயின்டனன்ஸ் செய்யாமலே பல லட்சம் வருமானம், உடைப்பு ஏற்பட்டால் அதனைச் செய்வதற்கு பல லட்சம் வருமானம் எனப் பொதுமக்களில் உயிரைவைத்து பணம் சம்பாதிக்கின்றனர் என்றார். தற்போது பாதாளச் சாக்கடையைப் பராமரித்து வருவது புதிதாகப் பொறுப்பேற்ற ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர் தான், ஆனால் அவர் தனது ஆதரவாளரான தேமுதிகவை சேர்ந்த ஒருவர் மூலம் பராமரித்து வருகிறார்'' என்றார்.
அதேபோல் அப்பகுதி மக்கள் கூறுகையில், "இது பாதாளச் சாக்கடை திட்டமா? அல்லது எங்களைப் பாதாளத்தில் தள்ளிவிடும் திட்டமா? என்று தெரியவில்லை. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 16 முறை உடைப்பு ஏற்பட்டு எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவருகிறது" என்கின்றனர் கவலையுடன்.