அரசு பெண் விடுதி வார்டன் வரலட்சுமி என்பவர் கதறி அழுதபடி வெளியிட்ட சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. அதில் "தொடர் தொல்லைகள், மொட்டை புகார்கள் மீது அதிகாரிகள் விசாரணை என்று டார்ச்சர் என்னால் தாங்க முடியவில்லை. இதனால் என் பணியையும் செய்ய முடியவில்லை. குடும்பத்தையும் பார்க்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றுகிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ விவகாரம் கூறித்து லட்சுமியிடமே நாம் கேட்டோம். அதற்கு "கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மாவட்ட பிற்பட்டோர் நல அரசு பெண்கள் பள்ளி விடுதி வார்டனாக பணி செய்து வருகிறேன். கடந்த 2018 முதல் என் மீது மொட்டை புகார்கள் அனுப்பி வருகின்றனர். அந்த புகார்கள் மீது அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் வந்து மாணவிகள் முன்பு என்னை மரியாதைக்குறைவாக பேசுகிறார்கள். இதனால் விடுதி பிள்ளைகள் கூட ஏளனமாகப் பார்க்கும் நிலை உள்ளது.
இதற்கெல்லாம் காரணம் உளுந்தூர்பேட்டையில் விடுதி வார்டனாக உள்ள முருகேசன் என்பவர் தான் நான் கடந்த எட்டு ஆண்டுகளாக போதக விடுதி காப்பாளர் சங்கத்தில் அங்கத்தினராக இருந்தேன். அதே சங்கத்தின் மாநில துணைத் தலைவராக இருந்து வரும் முருகேசன் அடிக்கடி எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். அவர் தொல்லை தாங்க முடியாமல் அந்த சங்கத்தை விட்டு வெளியேறி விட்டேன்.
ஆனாலும் முருகேசனின் தொல்லைகள் இன்றுவரை தொடர்ந்து கொண்டே உள்ளது. அவருக்கு வேண்டியவர்கள் மூலம் பொய்யான பெயர்களில் என் மீது மொட்டை புகார்களை அதிகாரிகளுக்கு எழுதியபடியே உள்ளனர். அந்த புகார் பொய்யானது போலியானது என்று தெரிந்தும் கூட அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் என்னை பணி செய்ய விடாமல் தொந்தரவு அளித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக முருகேசன் மீது நான் எழுதிய புகார்கள் என் புகார்கள் மீதான விளக்கங்கள் என அதிகாரிகளுக்கு கட்டுக்கட்டாக எழுதினேன். யாரோ எழுதும் புகார்களை விசாரிக்கும் அதிகாரிகள் நான் எழுதும் புகார்கள் பற்றி கண்டு கொள்வதில்லை.
காரணம் முருகேசன் சங்கத்தின் மாநில பொறுப்பில் இருந்து கொண்டு எனது புகார் விளக்கங்களை அதிகாரிகள் மூலம் தடுத்து எனக்கு எதிராக திசை திருப்பி விடுகிறார். இதனால் விடுதி பணியையும் செய்ய முடியவில்லை. என் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்க முடியவில்லை. விசாரணை என்ற பெயரில் டார்ச்சரை தாங்கமுடியாமல் தற்கொலை கூட செய்து கொள்ளலாம் என தோன்றுகிறது. ஏனென்றால் பெண்களை கேவலமான பிறவியாக தவறானவர்களாக சித்தரிக்கப் பார்க்கிறார்கள். இதை தாங்க முடியாமல்தான் வீடியோவில் பேசி என் ஆதங்கத்தை தெரியப்படுத்தினேன்" என தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விழுப்புரம் ஆகிய ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பல விடுதிகள் உள்ளன. இதுபோன்ற விசாரணை நடவடிக்கை என எங்கும் நடப்பது இல்லை. ஆனால் லட்சுமி மீது மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொய் புகார்கள். அதன் மீது அதிகாரிகளின் தொடர் விசாரணை என துரத்த காரணம் என்ன? அந்த முருகேசன் தான் என்கிறார்கள் இத்துறையில் பணி செய்யும் சில ஊழியர்கள். மேலும் மாவட்ட அதிகாரிகளாக யார் வந்தாலும் அவர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பேச்சை மட்டுமே கேட்கிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே நம்புகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் முருகேசனிடமே இந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டோம். அவர், "லட்சுமி மீது பொய்யான பலரை ஏவிவிட்டு நான் புகார் அனுப்பி வருவதாக அவர் கூறுகிறார். அவர் என் மீது அபாண்டமான பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார். இதேபோன்று கடந்த ஆண்டு தியாகதுருகம் போலீசில் நான் பாலியல் தொந்தரவு அளிப்பதாக பொய்யான புகார் அளித்தார். போலீசார் எங்கள் இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர். அப்போது லட்சுமி சமாதானமாக போவதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்று விட்டார். மேலும் என் மீது தேசிய பெண்கள் உரிமை ஆணையத்தில் லட்சுமி புகார் கொடுத்துள்ளார்.அங்கும் விசாரணை நடைபெற்று வருகிறது.
யார் யாரோ அவர் மீது எழுதும் புகார்களுக்கு எல்லாம் நான்தான் காரணம் என்று அவர் கூறுகிறார். மிகவும் தவறான குற்றச்சாட்டு நிச்சயமாக நான் அப்படிப்பட்ட செயல்கள் செய்பவன் இல்லை. இதுபற்றி லட்சுமி அவர்களிடம் நேரடியாகவே கூறியுள்ளேன். எனக்கும் உன் மீது அனுப்பும் புகார்களுக்கு நான் காரணமில்லை என்று விளக்கம் சொல்லியும் அவர் வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறார். எனக்கு மனைவி இரு பெண், ஒரு ஆண் என பிள்ளைகள் குடும்பம் உள்ளது. அப்படி உள்ள நான் இப்படிப்பட்ட இழிவான செயலை செய்வேனா? இந்த பிரச்சினையால் என் குடும்பத்தில் குழப்பம் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது" என்கிறார்.