கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்தக் கிராமம் எலவாசனூர் கோட்டை திருக்கோவிலூர் செல்லும் பிரதான சாலையில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி கலைவாணி. மணிகண்டன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிற நிலையில், அவரது மனைவி கலைவாணி குடும்பத்தினருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (20.01.2021) காலை அதே கிராமப்பகுதியில் உள்ள அவர்களுக்குச் சொந்தமான வயல்வெளிக்குச் சென்று வேலை பார்த்துவிட்டு மதியம் வீட்டிற்குத் திரும்பி வந்துள்ளார் கலைவாணி. பூட்டி விட்டுச் சென்ற அவரது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த இரண்டு பீரோக்களை கொள்ளையர்கள் உடைத்து திறந்து அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் இந்தக் கிராமத்திலிருந்து சில கிலோமீட்டர் இடைவெளியில் உள்ளது எஸ்.மலையனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த எல்ஐசி ஏஜென்ட் ஒருவரது பூட்டப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த இரண்டு வீடுகளிலும் பட்டப்பகலில் கொள்ளை நடந்துள்ளது.
இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதி கிராம மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளை நடந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எலவாசனூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம், பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு, கொள்ளை குறித்து வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் கொள்ளையடித்த கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
களவுபோன நகை, பணம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டுவார்கள். இப்போதெல்லாம் பகல் நேரங்களிலேயே வீடு புகுந்து கொள்ளையடித்து தங்கள் கெத்தை காட்டுகின்றனர். பகல் கொள்ளை அதிகரித்து வருவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர் இதுபோன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் காவல்துறை பகல் கொள்ளையர்களைப் பிடிக்குமா? என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.