திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் அய்யம் பாளையத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சிலர் கரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாங்கள் சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்படுவதாக வாட்சப்பில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதைப் பார்த்தவுடன் உதயநிதி ஸ்டாலினும் உடனே மாநிலத் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியையும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரையும் தொடர்பு கொண்டு வாட்சப் மூலம் உதவிகள் கேட்ட அய்யம்பாளையம் மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியும் உடனே ஆத்தூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமன் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டனையும் தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி பருப்பு மளிகைச் சாமான்கள் காய்கறிகள் வாங்கிக் கொடுக்க உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பாளர்களும் அய்யம்பாளையம் சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களுடன் காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். இப்படி வாட்சப்பில் தகவல் தெரிவித்தவுடன் தாயுள்ளத்தோடு தங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்த திமுக மாநில இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கும் அய்யம் பாளையம் மாற்றுத் திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.