துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிக்கையை ஒருவர் படித்தால் அவர் அறிவாளி என்றும், முரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர் என்றும் கூறினார். அதுமட்டும் இல்லாமல் பெரியாரின் போராட்டத்தில் ராமருக்கு செருப்பு மாலை போடப்பட்டது என்று தெரிவித்தார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்வாறு பேசியதற்கு ரஜினி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பெரியார் ஆதரவாளர்கள், அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினர். இருந்த போதிலும் கூட ரஜினி, தான் ஆதாரத்தோடுதான் பேசியுள்ளேன். மன்னிப்புக்கேட்க முடியாது என்று தெரிவித்துவிட்டார்.
இதற்கிடையில் ரஜினியின் இந்த கருத்திற்கு ட்விட்டரில் பதில் அளித்த நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, "முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா என கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன்" என்று தெரிவித்திருந்தார். ரஜினியை உதயநிதி ஸ்டாலினை வைத்து திமுக உரசி பார்க்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். மேலும் இப்படி விமர்சிப்பது உதயநிதிக்கு அரசியல் வளர்ச்சியை தரும் என்று திமுக நம்புவதாகவும் கூறியினர்.
இந்நிலையில், வடலூரில் ஒரு விழாவில் கலந்த கொண்ட உதயநிதி ஸ்டாலின், விழா முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேதினார். அப்போது, அரசியலுக்கு வருவதாக எனது பள்ளிக்காலத்தில் இருந்தே நடிகர் ஒருவர் கூறி வருகிறார் என ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். பின்னர் தி.மு.க. வினர் யாரும் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் பாரதிய ஜனதா துணையுடன் நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிட தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.