இன்று சட்டப்பேரவை முடிந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் தனது நண்பர்களுடன் நடந்து வரும்போது ''ஷு... யாரும் பேசாதீங்க ரெக்கார்ட் போட்ருவாங்க...' என முணுமுணுத்த சம்பவம் சிரிப்பை வரவைத்தது.
இந்த முணுமுணுப்புக்கு காரணம் நேற்று நடந்த சம்பவம்தான். நேற்று சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இவர்கள் இருவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நான் சென்ற ஆண்டு இந்த அவையில் பேசும்போது நீங்கள் வெளிநடப்பு செய்து விட்டீர்கள். நேற்றும் வெளிநடப்பு செய்து விட்டீர்கள். இன்று நான் பேசுவது தெரிந்து அதற்காகவே வெளிநடப்பு செய்து விடுகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் வெளிநடப்பு செய்யவில்லை. அதற்காக மீண்டும் எனது நன்றி. அப்படி நீங்கள் வெளிநடப்பு செய்து விட்டுச் சென்றாலும் தவறுதலாக என்னுடைய காரில்தான் ஏறி செல்வீர்கள். நீங்கள் மட்டுமல்ல நானும் மூன்று நாட்களுக்கு முன்பு உங்களுடைய காரில் ஏற சென்று விட்டேன். அடுத்தமுறை என்னுடைய காரை நீங்கள் தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் தயவு செய்து கமலாலயம் சென்று விடாதீர்கள்'' என்றார். உதயநிதியின் பேச்சால் பேரவை சிரிப்பலையில் மூழ்கியது. உடனடியாக எழுந்த ஓபிஎஸ் ''எங்களுடைய கார் எப்பொழுதும் எம்ஜிஆர் மாளிகை நோக்கித்தான் செல்லும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
அதனையடுத்து நேற்று சட்டப்பேரவை முடிந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் அன்பில் மகேஷ் உள்ளிட்ட தனது நண்பர்களுடன் நடந்து வருகையில் திமுக எம்.எல்.ஏக்கள் உதயநிதியின் பேச்சை பாராட்டினர். அப்பொழுது 'கமலாலயம் போயிடாதீங்கன்னு சொன்னது சூப்பர்' என்று சிரித்தபடி கமெண்ட் அடித்தனர். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் அந்த காட்சிகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இன்றும் அதேபோல் நண்பர்களுடன் வெளியே வந்த உதயநிதி வந்தபொழுது ''யாரும் பேசாதீங்க ரெக்கார்ட் பன்றாங்க.... அப்படியே போட்ருவாங்க'' என்ற குரல் ஒலித்தது.