திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்தில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியான ஏ கஸ்பா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 40க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் திருடு போய்வுள்ளது.
இதுக்குறித்து காவல்நிலையத்தில் புகார் தந்தால் புகாரை வாங்கி வைத்துக்கொண்டு அதற்கு சிஎஸ்ஆர் கூட தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. பெரும்பாலும் வண்டியை கண்டுபிடித்தும் தருவதில்லை, மேல் அதிகாரிகளிடம் முறையிட்டாலும் அவர்களும் கண்டுக்கொள்வதில்லையாம். இதனால் வாகனத்தை பறிக்கொடுத்தவர்கள் வண்டி இன்சூரன்ஸ் கூட பெற முடியாமல் தவிக்கின்றனர்.
ஆம்பூர் நகரத்துக்குள் மட்டும் பாதுகாப்புக்காக காவல்துறை 89 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலமாக இருசக்கர வாகன குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதா என கேள்வி எழுப்புகின்றனர்.
இதுப்பற்றி விசாரித்தபோது, ஏ கஸ்பா, சான்றோர் குப்பம், கன்னிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதாக்கப்பட்டுள்ளது. காரணம், இந்த வழியாக பாலாற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் திருடிக்கொண்டு லாரிகள், மாட்டு வண்டிகள் செல்கின்றன. ஆதாரம் சிக்கவிடக்கூடாது என்பதற்காக இந்த சிசிடிவிக்களை திட்டமிட்டே பழுதாக்கியுள்ளார்கள், அதனை காவல்துறையும் சரி செய்யவில்லை. இதனை நன்றாக தெரிந்துக்கொண்டே திருடர்கள் திட்டமிட்டு வாகனங்களை திருடி செல்கின்றனர் என்கின்றனர்.
உழைத்து சம்பாதித்த வாகனங்கள் திருடு போவதால் ஏழை மக்கள் நொந்துப்போய்வுள்ளனர். இதுவரை காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இருசக்கர வாகனங்களை பறிகொடுத்த அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்மென எதிர்பார்க்கின்றனர்.