வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பெரியதாமல் செருவு கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டராமன். இவரும் இவரது மனைவி பிருந்தாவும், செப்டம்பர் 29 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றுவிட்டு, மதியம் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது ஆம்பூர் அருகே மின்னூர் பகுதி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் குடிபோதையில் இருந்த மூவர் இருசக்கர வாகனத்தை வழிமறித்து பிருந்தாவின் கழுத்தில் இருந்த 1 -1/2 சவரன் தாலி சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட தம்பிதியினர், திருடன் என சத்தம் போட்டு கத்தியுள்ளனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் விபரத்தை அறிந்து தப்பியோடியவர்களை பிடிக்க துரத்தினர். செயின் பறித்துக்கொண்டு தப்பிய ஓடிய மூவரில் ஒருவர் மட்டும் சிக்கினார். அவனைப் பிடித்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
இதுபற்றிய தகவல், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்துக்குச் சென்றது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த நபரை விசாரணைக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலிஸாரின் விசாரணையில் பிடிபட்ட நபர் மின்னூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பது தெரியவந்தது. மற்ற இருவர் குறித்தும், இவர்கள் இப்படி எங்கெங்கு கைவரிசை காட்டியுள்ளார்கள், வேறு ஏதாவது குற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்களா என விசாரணை நடத்திவருகின்றனர்.
பட்டப் பகலில் தேசிய நெடுஞ்சாலயில் இருசக்கர வாகனத்தை மறித்து கழுத்தில் இருந்த தங்கத் தாலியைப் பறித்ததும், அவர்களைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்து அடித்ததும் தீயாய்ப் பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.