விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூர் எனும் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு ஜோதி என்ற மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடந்து வந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜபருல்லா என்பவர் இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு காணாமல் போனதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் அடிப்படையில் கடந்த மாதம் பத்தாம் தேதி காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது 142 பேரை காவல்துறை அதிகாரிகள் மீட்டனர். அதில் 109 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள், ஒரு குழந்தை. விசாரணையின் அடுத்தடுத்த கட்டமாக பல்வேறு தகவல்கள் வெளியாயின. முறையாக அனுமதி பெறாமல் காப்பகம் நடந்து வந்ததும், அதேபோல் அங்கு தங்கியிருந்த ஆதரவற்ற பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது தொடர்பாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சங்கிலியில் கட்டிப்போட்டு பலர் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும், அங்கே எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் உரிமையாளர் ஜூபி, அவரது மனைவி மரியா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்த நிலையில் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருக்கும் இரண்டு அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் தற்போது இரண்டு அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.