கிருஷ்ணகிரி மாவட்டம், சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலை இடித்து புதிதாக ஒரு கோவிலை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த கோவிலில் வேலை செய்வதற்காகப் பல இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்துள்ளனர். அந்த வகையில், கோவில் பணியில் ஒன்றான சிமெண்ட் சிற்பங்கள் செய்வதற்காக 1 மாதத்திற்கு முன்பு கடலூர் மாவட்டம் பிச்சாவரத்தைச் சேர்ந்த ராஜ்குமாரும் (37), சிதம்பரம் வயலூரைச் சேர்ந்த சபரிவாசனும் (58) வந்திருந்தனர்.
இந்த நிலையில், ராஜ்குமாரும், சபரிவாசனும் நேற்று அதிகாலை கோவிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதைக் கண்ட அந்த ஊர் மக்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள பாரூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜ்குமாரையும், சபரிவாசனையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ராஜ்குமாரும், சபரிவாசனும் மது அருந்தியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இருவர் மரணம் குறித்து போலீஸார் தெரிவிக்கையில், போதையில் ஒருவருக்கொருவர் தாக்கி கொலைகள் நடந்திருக்கலாம். அல்லது இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.