திண்டுக்கல்லைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை கடந்த 2012இல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை செய்தனர். இந்தக் கொலையில் சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திண்டுக்கல் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவருகிறது. பசுபதி பாண்டியனை கொலை செய்த சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நிர்மலா தேவி, ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று (22.09.2021) காலையில் வழக்கம்போல் 100 நாள் வேலைக்குச் சென்ற நிர்மலா தேவியை பசுபதி பாண்டியன் ஆதரவாளர்கள், இரண்டு டூ வீலர்களில் எட்டு பேர், திடீரென சூழ்ந்துகொண்டு அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது மட்டுமல்லாமல், நிர்மலா தேவியின் தலையை வெட்டி அதனை பசுபதி பாண்டியன் வீட்டின் கதவு முன்பு போட்டுவிட்டுச் சென்றனர். இந்தக் கொலையில் சம்மந்தப்பட்டுள்ள கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
இச்சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பரபரப்பு ஓய்வதற்குள், திண்டுக்கல் மாநகரை ஒட்டியுள்ள அனுமந்தராயன் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் ஸ்டீபன் என்ற இளைஞனின் தலையை மட்டும் வெட்டிக் கொண்டுவந்து ரோட்டில் வைத்துவிட்டு ஒரு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இந்த விஷயம் அனுமந்தராயன் கோட்டை மக்களுக்குத் தெரியவே, உடனடியாக போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில், ரோட்டில் கிடந்த ஸ்டீபன் தலையைக் கைப்பற்றிக் கொண்டு அவரது உடலை பல இடங்களில் தேடினார்கள். இறுதியில் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வட்டப்பாறை அருகே உள்ள காட்டில் ஸ்டீபனின் உடல் கிடப்பதைக் கண்டு போலீசார் அதைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஏதும் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணையை தொடங்கியிருக்கிறது. இப்படி ஒரே நாளில் ஒரு பெண்ணின் தலையையும் ஆணின் தலையையும் வெட்டி தனித்தனியாக போட்டது திண்டுக்கல் நகரம் மட்டுமல்ல, மாவட்ட அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்திலேயே இவ்வளவு துணிகரமாக கொலைசெய்து தலையைத் துண்டாக்கி வீதியில் வீசிவரும் கொலையாளிகளைக் காவல்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.