கடந்த சில நாட்களாக வானிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக தொடர்ந்து இடி மின்னலுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று அரியலூர், கடலூர் மாவட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. அந்த நேரத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மனைவி மாலைமணி அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் அவர்கள் ஊர் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.
இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தபோது திடீரென இருவர் மீதும் இடி மின்னல் தாக்கியது. இதில் மாலைமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த செல்வராஜை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர்.
இதேபோன்று அரியலூர் அருகே உள்ள வாரணவாசி ஊராட்சி சேர்ந்த மல்லூர் கிராமம் சேர்ந்த அன்பரசன்(40) அப்பகுதியில் கூலிக்கு நடவு வேலைக்கு சென்றுள்ளார். நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் நிலத்திலேயே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்தவர்களது உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் ஒரே நாளில் இடி மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.