கோவையை அடுத்த கோவை புதூரில் உள்ள மலை நகரை சேர்ந்தவர் மொய்தீன். ஆட்டோ டிரைவரான இவரது மகள் சர்மிளா (12) அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பள்ளி இல்லாததால் வீட்டில் உள்ள வேலைகளை செய்யவும், தலை முடியை சீவி இருக்கும் படி ஷர்மிளாவின் அம்மா கூறி இருக்கிறார்.
இதனால் அம்மாவுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த ஷர்மிளா திடீரென காணாமல் போனார். அதே சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் சியாம் (14 ) என்ற மாணவனும் காணாமல் போனார். ஒரே சமயத்தில் ஒரே பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை காணவில்லை என்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது ஷர்மிளா தனது அம்மா திட்டுவது பிடிக்கவில்லை, அதனால் வீட்டை விட்டு செல்கிறேன் என வீட்டில் கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே இரு குழந்தைகளின் பெற்றோர் பேரூர் போலீசில் இது குறித்து புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரையும் அதே பகுதியில் வசித்துவரும் செந்தில் என்பவரின் மனைவி பவித்ரா (35) ஆசை வார்த்தை காட்டி கடத்திச் சென்றதாக தெரியவந்தது.
ஆட்டோ டிரைவர் மொய்தீன் சமீபத்தில்தான் அப்பகுதிக்கு வீடு குடியேறி உள்ளார் என்பதால் குழந்தைகளை கடத்தி சென்ற பவித்ரா குறித்த விபரங்கள் எதுவும் இல்லை என போலீசில் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்கள்.
2 குழந்தைகள் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் காணாமல்போய் இரண்டு நாள் ஆகியும் எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் குழந்தைகளை கடத்தி சென்ற பவித்ரா குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ராவுக்கு குழந்தைகள் இல்லை என்பதால் இருவரையும் கடத்தி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.