
அரியலூர் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி பிரியா (30). இவருக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவரும் காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், லட்சுமி பிரியா கடந்த 9ஆம் தேதி பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு பணிக்கு சென்றுள்ளார். செந்துறை சாலை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்த சக போலீசார் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு தற்போது லட்சுமி பிரியா சிகிச்சை பெற்று வருகிறார்.
உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் லட்சுமி பிரியா, மூன்று நாட்கள் விடுமுறை எடுத்ததாகவும், அதன் காரணமாக திருச்சியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளிக்கு அவரை இடமாற்றம் செய்ததாகவும், அதில் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், அதே மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவரது மனைவி பிரியங்கா (28). இவர், அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் உடையார்பாளையம் பகுதியில் இவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, திடீரென குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே மாவட்டத்தில் காவல்துறையை சேர்ந்த இரு பெண்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.