தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சண்முகவேல் மற்றும் குருசாமி இருவரும் சகோதர வழி உறவினர்கள். இருவருக்கும் கிராமத்தின் வெளியே தனித்தனியாக ஒன்று மற்றும் ஒன்றரை ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. அதில் கடந்த 5ம் தேதியன்று தான் செய்த விவசாய மகசூலைப் பார்க்கச் சென்றிருக்கிறார் சண்முகவேல். வயலை சுற்றிப்பார்த்து வந்த சண்முகவேல் எதிர்பாராத வகையில் வயலில் அறுந்த கிடந்த ஹெவி மின் வயரைக் கவனிக்காமல் மிதித்திருக்கிறார். இதில் ஹெவி வோல்டேஜ் மின்சாரம் தாக்கிய சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியாகி இருக்கிறார்.
சண்முகவேல் வீட்டுக்கு வராததை அறிந்த அவரது உறவினர்கள் குருசாமியிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து கடந்த 6ம் தேதியன்று மதியம் வயல் பகுதிக்கு சென்ற குருசாமி, அங்கே சண்முகவேலைத் தேடியிருக்கிறார். அவர் குப்புறக் கிடந்ததைக் கண்டு பதறியவர் அவரைத் தட்டி எழுப்ப முயற்சித்துள்ளார் குருசாமி. இதில் பக்கத்தில் கிடந்த ஹெவி மின்வயர் பட்டதால் மின்சாரம் தாக்கி அவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வயல்காரரான குமார் தன் வயலுக்குச் சென்றபோது அங்கே அடுத்தடுத்து மின்சாரம் தாக்கப்பட்டு சண்முகவேலும், குருசாமி இருவரும் உயிரிழந்துகிடப்பது தெரியவரவே உடனே புளியங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். அதையடுத்து சம்பவ இடம் விரைந்த இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் எஸ்.ஐ.சஞ்சய்காந்தி உள்ளிட்ட போலீசார் அழுகிய நிலையில் கிடந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்த, ஊருக்குள்ளோ இந்த சம்பவம் பதற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி ஊர்மக்கள் திரண்டிருக்கிறார்கள். ‘வயல்வெளி பகுதிகளில் செல்லும் அதீக அழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் மறுநொடியே அது தொடர்பான டிரான்ஸ்ஃபார்மரின் அந்த வழி மின் இணைப்பிற்கான ஃபியூஸ் தானாகவே கட்டாகி மின்இணைப்பு துண்டித்து விடுகிற வகையில் தானே செட் செய்வது வழக்கம். அப்படியிருக்க இந்த மின்வயர் அறுந்த உடனே ஏன் மின் இணைப்பு கட்ஆகல. முறைப்படி செய்யப்பட்டிருந்தா விலை மதிப்புள்ள இரண்டு விவசாயிகளின் உயிர் பலியாகி இருக்குமா. இதுக்கு இ.பி. பதில் சொல்லணும்.
உயிரிழந்தவர்களில் சண்முகவேலுக்கு மனைவியும் 2 பெண்பிள்ளைகளும், குருசாமிக்கு மனைவியும் 3 பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு போதிய நிவாராண உதவியோட ரெண்டு குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கவேண்டும். அப்போதுதான் உடலை வாங்குவோம்’ என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதையடுத்து, மின்வாரியத் துறை பலியான இரண்டு குடும்பங்களுக்கும் தலா மூன்று லட்சம் என 6 லட்சம் இழப்பீடு அளித்திருக்கிறது. அதிகாரிகளின் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடல்களை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.