2019 ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 28 ந் தேதி அறிவிக்கப்பட்டது. இணையவழியில் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். ஆனால் தேர்வு நடக்கும் தேதி திடீரென்று நேற்று அறிவிக்கப்பட்டது. அதாவது ஜூன் 8 ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள் 1 க்கும், 9 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தாள் 2 க்கான தேர்வுளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு நடக்கும் ஜூன் 8 ஆம் தேதியே பி.எட் இறுதியாண்டு தேர்வும் நடப்பதால் ஒரே நாளில் எப்படி இரு தேர்வுகளை எழுத முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் மாணவ மாணவியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு நாளையோ அல்லது பி.எட் தேர்வின் நாளையோ மாற்றி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வை பொறுத்தவரை தேர்வின் தேதியை அறிவிக்கும் முன் அதே நாளில் வேறு ஏதேனும் முக்கிய தேர்வுகள் இருக்கிறதா (யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி) , விழா காலமாக இல்லாமல் இருக்கிறதா, விடுமுறை காலமாக இல்லாமல் இருக்கிறதா என்பதை பார்த்துதான் தேர்வு நாளை முடிவு செய்யவேண்டும். அப்படி இருக்க இப்படி ஒரு குழப்பமான சூழல் எப்படி உருவானது.தேர்வு தேதி மாற்றப்படுமா என்பது இனிதான் தெரியவரும்.