Skip to main content

இரு பிள்ளைகளை இழந்து தவிக்கும் தந்தை; வேண்டுகோள் விடுத்த அமைச்சர் சி.வெ.கணேசன்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

Two child passed away in same family near cuddalore

 

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதியிலுள்ள எரப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல்(40). லாரி டிரைவரான இவருக்கு நித்திஷ்(12), சூர்யா(8) என இரண்டு மகன்கள் உள்ளனர். வீட்டின் அருகிலுள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் நித்திஷ் 7ஆம் வகுப்பும், சூர்யா 5ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகிலுள்ள புது ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது தம்பி சூர்யா தவறி தண்ணீரில் விழுந்ததைப் பார்த்த அண்ணன் நித்திஷ் சூர்யாவைக் காப்பாற்றுவதற்காக ஏரியில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்குமே நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நித்திஷ் மற்றும் சூர்யாவை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவர்கள் நித்திஷ் மற்றும் சூர்யாவை பரிசோதனை செய்து பார்த்ததில் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவணங்குடி போலீசார் மருத்துவமனையில் இருந்த இரண்டு சிறுவர்களின் உடலை திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

 

பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று சிறுவர்கள் இருவரின் சடலங்களும் அவர்களது வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. ஒரே குடும்பத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது.  

 

Two child passed away in same family near cuddalore

 

இந்நிலையில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திட்டக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வெ.கணேசன் உயிரிழந்த சிறுவர்கள் நித்திஷ், சூர்யா உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் இதுபோன்று இனிவரும் காலங்களில் இறப்பு ஏற்படாத வகையில் பெற்றோர்கள் பாதுகாப்பாக குழந்தைகளை வைத்திருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்