மயிலாடுதுறையில் உள்ள பரிமளரெங்கநாதர் கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளிப் படிச்சட்டத்தைத் திருடிய தீட்சிதர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரசித்திப் பெற்ற பரிமளரெங்கநாதர் கோயிலில் உற்சவமூர்த்தியைத் தூக்கிச் செல்ல படிச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளித் தகடுகளால் கவசமிடப்பட்டிருக்கும். இந்த நிலையில், கடந்த 2014- ஆம் ஆண்டு இந்த வெள்ளித் தகடு திருடு போனதாக, காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், சிலைக் கடத்தல் பிரிவில் அண்மையில் புகார் அளித்திருந்தார். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டதில் வெள்ளித் தகடுகள் திருடப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இச்செயலில் ஈடுபட்ட ஸ்ரீனிவாச பட்டாச்சார்யார், முரளிதர தீட்சிதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் புதிதாக படிச்சட்டம் செய்ய ஈடுபட்ட நடவடிக்கையில், நகைக்கடையில் வெள்ளிக்கட்டிகளைக் கொடுத்ததும், நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது. அவர்களிடம், சிலைக் கடத்தல் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.