
இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண், நடிகர் ஆர்யா தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டார் என்று நடிகர் ஆர்யா மீது புகார் தெரிவித்திருந்தார். ஜெர்மன் நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசித்து வரும் விட்ஜா, ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் அளித்துள்ள புகாரில், பணத்திற்கு கஷ்டப்படுவதாகக் கூறிய ஆர்யா, தன்னை விரும்புகிறேன் என்றும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாகத் தெரிவித்திருந்தார். பிரபல நடிகரான ஆர்யா மீது, பெண் ஒருவர் ஏமாற்றிவிட்டதாகப் புகார் அளித்தது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடிகர் ஆர்யாவும் அண்மையில் போலீசார் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னைச் சேர்ந்த இருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் உடந்தையாக இருந்த ஹூசைனி பையாக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.