சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட சொக்கன் குடியிருப்பை சேர்ந்த தண்ணீர் லாரி ஓட்டுநர் செல்வன் காட்டுக்குளம் பகுதியில் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் நில விவகாரம் இருந்ததாகவும், கொலையில் சம்பந்த பட்டிருக்கலாமெனவும் தட்டார்மட காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் திருமணவேல் மீது கொலை குற்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது நெல்லை மாவட்ட காவல்துறை. இருப்பினும் அதற்கு பின்னர் குற்றவாளிகள் மீது எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை காவல்துறை.
மாறாக இன்ஸ்பெக்டரை மட்டும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்தனர். போலீசாரின் மெத்தனப் போக்கால் கொந்தளித்த செல்வனின் உறவினர்கள், "கொலைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே கொலையுண்ட செல்வனின் உடலைப் பெற்றுக் கொள்வோம்" என போராட்டத்தினை துவங்கினர். இந்த போராட்டத்திற்கு திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அனிதா ராதாகிருஷ்ணன், போராட்டத்தில் கலந்துண்டு ஆதரவு தெரிவித்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் அவர் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது காரை அடித்து நொறுக்கினர் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள்.
இது அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. இதனை கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை இன்று, ஜின்னா மற்றும் செல்வநாயகம் ஆகிய இருவரை கைது செய்துள்ளது.