மூத்த அமைச்சர்களுடன் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்திய நிலையில் தேனி, பெரியகுளம், தென்கரையில் ஓ.பி.எஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் தற்போது கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பசுமைவழிச் சாலையில் அமைந்துள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ்-இன் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். துணை முதல்வருடன் ஆலோசனை முடிந்த நிலையில் அமைச்சர்கள் அனைவரும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டிற்கு ஆலோசனை நடத்த சென்றனர். மூத்த அமைச்சர் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தமிழக முதல்வர் இல்லத்திற்கு சென்று ஆலோசித்த நிலையில் தனக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அகற்ற அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் காரணமாகவே போடியில் ஒட்டப்பட்டிருந்த அவரது ஆதரவு போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 'ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே' என ஒற்றுமை பாடியிருந்தார் ஓ.பி.எஸ்.
முதல்வருடனான ஆலோசனைக்கு பிறகு மீண்டும் அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ.பி.எஸ் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு மீண்டும் முதல்வர் வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்தினர். இவ்வாறு இரண்டு முறை முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில்,
தற்பொழுது அறிக்கை வெளியாகி உள்ளது, அந்த அறிக்கையில், அனைவரும் ஒன்றுபட்டு தொடர் வெற்றி பெறுவோம். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துக்களை கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நேரத்தில் தொண்டர்கள், மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் கட்சித்தலைமை உரிய நேரத்தில் சிறப்பான முடிவுகளை எடுக்கும். ஜெயலலிதா இருந்தபோது, இருந்த ராணுவக் கட்டுப்பாடு போன்று இனிவரும் காலங்களில் கட்சியில் ராணுவக் கட்டுப்பாடு இருக்கும். சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம். கட்சியினர் மக்கள் பணியிலும், களப்பணியில் மட்டுமே செயல்படுங்கள் என அறிவுறுத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.