Skip to main content

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கைது!

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

tvk Party leader Velmurugan arrested

 

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என டெல்லியில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கர்நாடகா சார்பில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறக்காததைக் கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது. அதே சமயம் நேற்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டன.

 

இதற்கிடையில் நேற்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது எனக் கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12 ஆயிரத்து 500 கன அடி நீரைக் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 3000 கன அடி நீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் காவிரி நதி நீர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதும், காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்ட போதும் காவிரி நதி நீர் பங்கீட்டைத் தர மறுத்து கர்நாடக அரசே பந்த் அறிவித்தது. கன்னட கும்பல்களைத் தூண்டி விட்டு, தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயலை கர்நாடக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருந்தாலும், பாஜக அரசு இருந்தாலும் தமிழர்களை வஞ்சிக்கிறது. தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறது. இவ்வாறு துரோகம் செய்கிற கர்நாடக அரசிற்கு, மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீரைத் திறந்துவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்