இந்தியாவில் பெட்ரோ, டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியினர் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது காரை, மாட்டு வண்டியில் ஏற்றி வந்தனர். மேலும், போராட்டத்தில், ‘இதேநிலை தொடரக்கூடாது இனி வரும் காலங்களில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை கட்டாயம் குறைக்க வேண்டும். அப்படி குறைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். அதேபோன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர்.
மேலும், சிலிண்டரை பாடை கட்டி அதன் மீது படுக்க வைத்து நான்கு பேர் தூக்கி வந்தனர். இதுகுறித்து அந்த கட்சியின் தொண்டர்கள், ‘இந்த விலையேற்றத்தினால் நடுத்தர ஏழை எளிய மக்கள் குடும்பம் நடத்த முடியாது. மத்திய அரசு ஏற்கனவே சமையல் எரிவாயு விலை ஏற்றத்தை சரிக்கட்டும் விதமாக குடும்பத்தில் பயன்படுத்தும் சிலிண்டர்களுக்கு மானியம் அளித்து வந்தது. ஆனால் சமீப காலமாக அந்த மானியத்தையும் முற்றிலும் நிறுத்தி விட்டது. எனவே பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை குறைத்து மக்களின் தலையில் ஏரி உள்ளதை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.