Skip to main content

திருமுருகன் காந்தியை தனியறையில் சிறைவைத்திருக்கும் கொடூரம்! மதிய உணவு வழங்காமல் அக்கிரமம்! வேல்முருகன் கண்டனம்

Published on 27/09/2018 | Edited on 27/09/2018
tvk


திருமுருகன் காந்தியை காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த பாழும் தனியறையில் சிறைவைத்திருக்கிறார்கள். சுகாதாரமான உணவோ, பெரும்பாலும் மதிய உணவுமே வழங்காது அவருக்கு உடற்பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கும் அக்கிரமம் நடக்கிறது. வயிற்றுப்போக்கு-வாந்தி, ரத்த சர்க்கரைக் குறைவு மற்றும் ரத்த அழுத்தக் குறைவால் அவர் மயங்கிவிழுந்த நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்காத அரக்கத்தனமாக உள்ளது. 
 

சிறைச் சட்ட விதிகளுக்குப் புறம்பான இந்த மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்குக் காரணமான சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கவும் அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, சேலம்-படப்பை 8 வழிச்சாலை ஆகியவை பற்றி ஐநா அவையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல வழக்குகளைப் புனைந்து சிறையிலடைத்துள்ளது தமிழக அரசு; ஒன்றிய பாஜக மோடி அரசின் கட்டளைப்படியே இதைச் செய்துள்ளது அதிமுக பழனிசாமி அரசு.
 

இதில் இரண்டு வழக்குகளில் நீதிமன்றத்தால் திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார்; ஆனால் மீதி வழக்குகளுக்காக 45 நாட்களாக அவர் வேலூர் சிறையில் உள்ளார்.
 

சிறையில் காந்தி, காற்றே புகாத, புழுப் பூச்சிகள் நிறைந்த பாழும் தனியறையில் அடக்கப்பட்டுள்ளார். அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அவர் அனுமதிக்கப்படுவதில்லை. முறையான, சுகாதாரமான உணவு அவருக்கு வழங்கப்படவில்லை; பெரும்பாலும் மதிய உணவே வழங்கப்படுவதில்லை.
 

வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கிலான இத்தகைய செயல்களால் திருமுருகன் காந்திக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி, ரத்த சர்க்கரைக் குறைவு, ரத்த அழுத்தக் குறைவு என உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அவர் மயங்கிவிழுந்துகிடந்திருக்கிறார். அதைத் தற்செயலாகப் பார்த்த காவல் பணியாளர் ஒருவர் பயந்து, மனமிரங்கி அவரைத் தூக்கித் தோள் மேல் போட்டுக் கொண்டுபோய் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
 

மருத்துவமனைக்கு திருமுருகன் காந்தி கொண்டுசெல்லப்பட்டது குறித்து அவரது வீட்டாருக்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
 

மருத்துவமனையில் இரண்டு நாட்களாவது படுக்கையில் இருக்க வேண்டும் என்று சொன்னார் மருத்துவர். ஆனால் அவரே  சிறிது நேரம் கழித்து, வேண்டியதில்லை போகலாம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக திருமுருகனை வெளியேற்றியிருக்கிறார்; காரணம், மேலிட அழுத்தம் என்கிறார்கள்.
 

இதனால் திருமுருகன் காந்தி உடல்நல பாதிப்புடன் தொடர்ந்து அவதிப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்; சிகிச்சை அளிக்காத நிலையில் இந்த உடல்நலிவு நோயாக வலுப்பெற்று விபரீத விளைவுக்கு இட்டுச்செல்லக்கூடும்.
 

திருமுருகன் காந்திக்கு இழைக்கப்படும் இந்த தொல்லை, துன்புறுத்தல்கள் திட்டமிட்டே நடப்பவை என்பதோடு, சிறைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானவை; மனித உரிமை மீறல்கள் இவை!
 

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், உடல்நலம் பாதித்த திருமுருகன் காந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கவும் அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

தொட்டாலே உதிர்ந்து விழும் கட்டிடம்; அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையிலான சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் வேலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது வரை வேலூர் அரசு பழைய மருத்துவமனை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகம், அப்துல்லாபுரத்தில் உள்ள சிறிய டைட்டில் பூங்கா கட்டுமான பணி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

அப்துல்லாபுரத்தில் கட்டப்பட்டு வரும் சிறிய டைட்டில் பூங்கா பணி கடந்த ஜனவரி மாதமே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர் முடிக்காததால் அவருக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. அடுத்த எட்டு மாத காலங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 29 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட மகளிர் தங்கும் விடுதியை ஆய்வு மேற்கொண்ட போது கட்டிடம் முறையாக தரம் அற்று கட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு சில இடங்களில் தொடும்போதே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது.

Recommendation to take action against the authorities as  building has been constructed in substandard manner

மேலும் கட்டிடத்தின் பகுதிகள் மிகுந்த விரிசலுடன் காணப்படுவதால் அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி ஆய்வு குழு ஏழை எளிய மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு ஒதுக்கிய நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், இது மன்னிக்க முடியாத தவறு. இந்த கட்டிடம் வரும் காலத்தில் பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், ஆகவே மாவட்ட ஆட்சியர், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து இந்த கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்து இதன் தரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். அறிகையின் முடிவில் தரமற்று கட்டப்பட்டது தெரியவந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதோடு அவரை பிளாக் லிஸ்டில் போட வேண்டும் என்றனர்.

மேலும் இக்கட்டிட கட்டுமான பணியை மேற்பார்வை செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு கூடுதல் கட்டிடம், கூடுதல் ஆய்வகங்கள் வேண்டும் என்பதால் அரசு முன்னுரிமை அடிப்படையில் உரிய நிதியை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் கூறினார்.