Skip to main content

காவலரின் கையை முறித்த மணல் கொள்ளையர்கள்... நடவடிக்கை எடுக்காத காவல்துறை..?

Published on 28/10/2019 | Edited on 28/10/2019

கடந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியாய் தாமிரபரணி நதிப்படுகையில் மணல் கொள்ளைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றாலும் பாதிக்கப்படுவது என்னவோ பொதுமக்களே.! இதில் தங்களது உயிரையும் இழந்திருக்கின்றனர் சிலர். அந்தவகையில், மணல் கொள்ளையை தடுக்க சென்ற காவலரின் கையை முறித்துள்ளனர் மணற் கொள்ளையர்கள்.

 

tuticorin police officer hospitalized

 

 

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஏரல், திருச்செந்தூர் தாலூகாக்களில் கடந்த பத்தாண்டுகளாக தாமிரபரணி நதிப்படுகையில் வரைமுறையின்றி மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருவதும், கோடிகளில் புரளும் மணல் வர்த்தகத்தால் மணல் மாபியாக்கள் தனி சாம்ராஜ்ஜியமே நடத்துவருவதும், மணல் கொள்ளையை எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவதும் காணக்கூடான ஒன்று. இந்நிலையில், கடந்த 25.10.2019 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரியும் ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவர் செய்துங்கநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் உத்தரவின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். விட்டிலாபுரம் எனும் ஊரில் மணல் கொள்ளை நடப்பதாக தகவலறிந்து அங்கே செல்ல, போலீசைக் கண்டதும் மணல் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடிய மணல் கொள்ளையனை விரட்டிச் சென்று அரை மணி நேரமாக தன்னந்தனியாக மணல் கொள்ளையனுடன் மல்லுக்கட்டிய போது சற்குணத்தின் இடதுகை முறிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகே மணல் கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளான். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர், சற்குணத்தை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டையிலுள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதித்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் மணற்கொள்ளையன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

 " இதனை எதிர்பாராத விபத்தாக காட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவதாகவும், ஆய்வாளர் இத்தாக்குதலை மறைக்கும் நோக்கில் சற்குணத்திடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்கு முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கூடிய காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை எனும் போது மணல் கொள்ளையர்களை எதிர்த்து சாமானிய மக்களால் எப்படி போராட முடியும்.? எப்படி போராட முன்வருவார்கள்.? இது குறித்து உடனடியாக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்." என்கின்ற மள்ளர் பேராயம் அமைப்பு மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தை துவக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்