Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு; நிதி உதவி வழங்கிய கனிமொழி எம்.பி.

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Tuticorin issue! Kanimozhi MP who provided relief fund

 

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியின்போது காவல்துறையினர் நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அப்பாவிகள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். திமுக அரசு அமையும்போது, இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சொல்லியிருந்தார் மு.க.ஸ்டாலின். அதன்படி திமுக அரசும் அமைந்தது.

 

துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் தனது அறிக்கையை திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இரு மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ் பதவிகளில் உள்ள உயரதிகாரிகள் உள்ளிட்ட 17 பேர் மீது குற்றம் சுமத்தியது அந்த அறிக்கை. 13 பேர் படுகொலைக்கு காரணமான அவர்கள் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு துறை ரீதியிலான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கான ரிசல்ட் என்னவென்று இதுவரைக்கும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. 

 

இந்த நிலையில், ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி தாக்கல் செய்து அதன் மீது நடந்த விவாதத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே வழங்கிய நிதியோடு, கூடுதலாக தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் முகமாக, இன்று (10/12/2022), தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் அறிவித்த கூடுதல் தொகை 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வழங்கினார். 

 

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்