Skip to main content

கொலை குற்றவாளியை சுட்டுப் பிடித்த காவல்துறை!

Published on 12/03/2023 | Edited on 12/03/2023

 

Tuticorin advocate case police arrested acquest

 

தமிழ்நாட்டில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடும் குற்றவாளிகளை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துவருகின்றனர். அந்தவகையில், தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளியை போலீஸார் சுட்டுப் பிடித்துள்ளனர்.  

 

கடந்த பிப்ரவரி 13ம் தேதி கோவை நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு சம்மந்தமாக ஆஜராக வந்த கோகுல்ராஜ் என்பவரை ஒரு கும்பல் நீதிமன்றம் அருகையே சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. அந்த வழக்கில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏழு பேரை காவல்துறையினர் கோத்தகிரியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை கோவைக்கு அழைத்து சென்றபோது அதில், ஜோஸ்வா, எஸ்.கவுதம் இருவரும் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறவே போலீசாரும் அவர்களை காரிலிருந்து இறக்கிவிட்டுள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்டு இருவரும் தப்பித்து ஓடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரையும் துரத்திச் சென்ற போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றனர் என்று கூறி துப்பாக்கியால் முழங்காலுக்கு கீழ் சுட்டு போலீசார் பிடித்தனர்.  

 

இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர்கள் திருடிய பொருட்களை மீட்க அவர்களை அழைத்துக்கொண்டு போலீஸ் சென்றபோது அவர்கள் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பினர். அப்போது காவல்துறையினர் தங்கள் பாதுக்காப்பிற்காக துரை மற்றும் சோமசுந்தரம் இருவரையும் காலுக்கு கீழ் சுட்டுப் பிடித்தனர். அதேபோல், கடந்த பிப். 20 ஆம் தேதி அயனாவரம் பகுதியில் வாகன சோதனையின் போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிய பெண்ட் சூர்யா என்பவரை காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடித்தனர். 

 

இந்நிலையில் இன்று பிப்.12ம் தேதி, தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை போலீஸார் சுட்டு பிடித்துள்ளனர். 

 

முத்துக்குமார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷ், தலைமறைவாக இருந்த நிலையில், இன்று தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் அவரை காவல்துறையினர் கண்டறிந்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அப்போது காவல்துறையினர் அவரை காலில் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில், குற்றவாளி ஜெயப்பிரகாஷ் தாக்கியதில் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு காவலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது குற்றவாளி ஜெயப்பிரகாஷ் உட்பட காயம் அடைந்த இரு காவலர்களும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு செய்துவருகிறார். 

 


 

சார்ந்த செய்திகள்