விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கோரிக்கை மனுவினை அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது ஊத்துப்பட்டி கிராமம். விவசாயம் பொய்த்து போன நிலையில் அடிப்படை வருவாய்க்காக இக்கிராமத்திலுள்ள 500க்கு மேற்பட்ட மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
சமீபகாலமாக இவர்களுக்கு சரியாக பணி வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டினை விடுத்துள்ள இக்கிராம மக்கள் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினருடன் இணைந்து இன்று காலையில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இதில், " மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் தொய்வில்லாமல், முறையாக வேலை வழங்க வேண்டும், சட்டப்படியாக நிர்ணயம் செய்யப்பட்ட 229 ரூபாய் ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையில் ஈடுப்பட்டனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மனுவினை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்தனர். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.