Skip to main content

'கஞ்சா' கடத்தல் போய் 'மஞ்சள்' கடத்தல்; வேதாரண்யம் பரபரப்பு;

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

turmeric to srilanka from vethernayam

 

கஞ்சா கடத்தலிலும், தங்கக் கடத்தலிலும் அவ்வப்போது பேசப்படும் வேதாரண்யம் பகுதி, தற்போது மஞ்சள் கடத்தல் விவகாரத்திலும் பேசும் பொருளாகியிருக்கிறது.

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கிராமம் பெரிய குத்தகை. அங்குள்ள ஒரு வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாகக் கடலோர காவல் படையினருக்கு போட்டிக் கடத்தல்காரர்கள் மூலம் ரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது.

 

கிடைத்த தகவலின்படி கடலோர காவல்படையினரும், போலீஸாரும் பெரிய குத்தகையிலுள்ள முனீஸ் என்கிற முனீஸ்வரன் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 80 மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்திருந்ததைக் கைப்பற்றினர். 

 

இதையடுத்து, கடலோர காவல்படையினர் அவரது வீட்டில் இருந்த மஞ்சள் மூட்டைகளைப் பறிமுதல் செய்ததோடு முனீஸ்வரனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முனீஸ், கஞ்சா கடத்திய வழக்கில் பலமுறை கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து மீனவர் ஒருவரிடம் விசாரித்தோம், "கடத்தல் இன்று நேற்று துவங்கியது அல்ல. பல ஆண்டுகளாக நடக்கிறது. கடலோரப் பகுதியில் உள்ள வீடுகளைப் பார்த்தாலே ஏதோ தவறு நடக்கிறது என்பது தெரிந்துவிடும். இங்கு விவசாயமோ மற்ற வருமானமோ கிடையாது. ஆனாலும் மாட மாளிகைகளும், ஆடம்பர சொகுசு கார்களும் இருக்கும். கடலோர பாதுகாப்புப் படை போடப்பட்டும் கடத்தல் நின்றுவிடவில்லை. இது முழுக்க முழுக்க காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்குத் தெரிந்தே நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல" என்கிறார்கள் எதார்த்தமாக.

 

 

சார்ந்த செய்திகள்