கேட்ட தொகுதி எண்ணிக்கையையும், கேட்ட தொகுதிகளையும் ஒதுக்காத காரணத்தினால் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்தநிலையில் அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 60 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கையெழுத்திட்டார். அவர் கோவில்பட்டியில் இருந்ததால் அந்த ஒப்பந்தத்தை அமமுக துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவனிடம் அளித்தார்.
கூட்டணி இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் ஆனபோது டிடிவி தினகரன் சென்னையில் இல்லாததால், விரைவில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க உள்ளார் என்ற தகவல்கள் முன்னதாக வெளியாகியிருந்த நிலையில், தற்போது கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை டிடிவி தினகரன் சந்தித்தார். இந்த சந்திப்பில் தேர்தல் பரப்புரை திட்டங்கள் குறித்து பேசப்படும் எனக் கூறப்படுகிறது. தேர்தல் கூட்டணிக்குப் பிறகு முதன்முறையாக டிடிவி.தினகரன் விஜயகாந்தை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.