புதிய பணியாளர்கள் சேர்க்கை மற்றும் பதவி உயர்விற்கான மருத்துவ தகுதி வழிகாட்டு விதிகளை பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு பெண் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணியாக இருந்தால் அவர் பணியில் சேர தகுதி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்றவர்கள் குழந்தை பெற்ற பின் நான்கு மாதம் கழித்தே பணியில் சேர தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி உயர்வுக்கும் இதே விதி பொருந்தும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இது பெண்கள் உரிமையை பறிக்கும் செயல் என ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு அமமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்வில் கர்ப்பிணி பெண்களுக்கு இடமில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அறிவிப்பு கண்டனத்திற்குரியது. தாயைப் புனிதமாக வணங்கும் நம் நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இப்படி அறிவித்திருப்பது தாய்மையை இழிவுபடுத்தும் செயல். எனவே, பெண்ணுரிமையை மதித்து இந்த உத்தரவை SBI திரும்பப் பெற வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.